மோசடி வழக்கில் நடிகர் கவின் குடும்பத்தினருக்கு 5 ஆண்டுச் சிறை!

ஒரு பிரச்னை காரணமாக குடும்பத்தோடு திருச்சியிலிருந்து சென்னை குடிபெயர்ந்தோம். அப்போது உறவினர்கள் யாரும் அடைக்கலம் தரவில்லை. நண்பர்கள்தான் உதவினார்கள்’ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் கவின், நிகழ்ச்சியில் கூறிய வார்த்தைகள் இவை.

இந்நிலையில் நடிகர் கவின் ராஜ் குடும்பத்தினர் சீட்டு மோசடி வழக்கில், `குற்றவாளிகள்’ எனத் திருச்சி மாவட்ட தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவின் ராஜ். இவரது தாய் ராஜலட்சுமி என்கிற ராஜி, சொர்நாதன், அருணகிரிநாதன், தமயேந்தி, ராணி ஆகியோர் சேர்ந்து கூட்டாக ஏலச்சீட்டு நடத்தியதாகவும், வாடிக்கையாளர்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமல் நடிகர் கவின்ராஜ் குடும்பத்தினர் கடந்த 2007ம் ஆண்டு மொத்தமாக தலைமறைவாகிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 29 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் நடிகர் கவின், `நட்புனா என்ன தெரியுமா?’ என்கிற திரைப்படத்திலும், சரவணன் மீனாட்சி மற்றும் பிக்பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்கள், நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமாகி உள்ளார். மேற்படி வழக்கு விசாரணையில், கடந்த வாரம் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. அதில் 31 பேர் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் சொன்னார்கள். இதுதொடர்பான குறுக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முடிந்தநிலையில், இன்று திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருபாகரன் மதுரம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி, “உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் தொடர்பாக சாட்சியங்கள் உங்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?” எனக் கேட்டார். தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவரான நடிகர் கவின் ராஜின் பாட்டி, வயது முதிர்வு காரணமாக சோர்வாகக் காணப்பட்டார். அவரை இருக்கையில் நீதிபதி அமர வைத்தார்.

அதனையடுத்து தீர்ப்பு வாசிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 31 சாட்சிகள் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளதால், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகள் அனைவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகள் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும், அந்தத் தொகையை வழக்கு தொடர்ந்த 2007ஆம் ஆண்டு முதல் 5 சதவிகித வட்டி விகிம் கணக்கிட்டு ரூ.55.10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். கட்டத் தவறினால் குற்றவாளிகளின் சொத்தைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுமிதா, மீரா மிதுன் உள்ளிட்டோர் வரிசையில் தற்போது நடிகர் கவின் ராஜ் குடும்பம் சர்ச்சையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Credits: Vikatan

Advertisements

Next Post

மெர்சலில் விஜய்-க்கு மேஜிக் கற்றுத் தந்தவருக்கு சம்பள பாக்கி...!

Sat Aug 31 , 2019
மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மேஜிக் சொல்லிக் கொடுத்த மேஜிக் நிபுணருக்கு 4 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 4 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி: அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் நடித்து வெளியான மெர்சல் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்திற்காக விஜய்க்கு மேஜிக் சொல்லி தந்ததற்காக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 4 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளதாக, கனடாவை […]
%d bloggers like this: