போலி திருமணச் சான்றிதழ்… பணம் பறிக்கும் மோசடி..”திரெளபதி” திரைவிமர்சனம்..!!

போலி திருமண சான்றிதழ் தயாரித்து, ஒரு குடும்பத்தை அழிக்கும் கும்பலை, பழிவாங்கும் ஹீரோ என்ன மாற்றத்தை கொண்டு வருகிறார் என்பதுதான் திரெளபதி. மனைவி திரெளபதி, மனைவியின் தங்கை லட்சுமி ஆகியோரை கொன்ற குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்படும் ரிச்சர்ட், ஜாமினில் வெளியே வருகிறார். சென்னைக்கு வரும் அவர் வடசென்னையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சைக்கிளில் டீ விற்கிறார். அங்கு வருகிற ஒரு போலி வழக்கறிஞரையும் கட்சிக்காரர் ஒருவரையும் சத்தம் போடாமல் போட்டுத் தள்ளிவிட்டு அதை வீடியோ எடுத்து போலீஸ் அதிகாரிக்கு அனுப்புகிறார்.

போலீஸ், யார்ரா இது என்று தேடுகிறது. இதற்கிடையே திரெளபதி பற்றி டாக்குமென்டரி எடுக்கிறார் பெண் இயக்குனர் ஒருவர். அவர் மூலமாக ரிச்சர்ட் சிக்க, தன் மனைவி திரெளபதி சாகவில்லை என்பது தெரிய வருகிறது, அவருக்கு! பிறகு ஏன் ரிச்சர்ட் சிறைக்குப் போனார்? அவர்களை கொன்றதாக சொன்னது யார்? ஏன் இது நடந்தது? என்பதற்கு சுற்றி சுழற்றி விடை சொல்கிறது படம்.

சாதி, ஆணவ கொலை விவகாரம், ஒரு சாதியை தூக்கிப்பிடிக்கும் வசனம் என டிரைலர் வெளியான போதே ஏகப்பட்ட சர்ச்சைகள். போலியாக திருமண சான்றிதழ் தயாரித்து, பணக்காரப் பெண்களை குறி வைத்து நடக்கும் மோசடியை சொல்ல வந்தவர்கள், அதற்கு பின்னால் சாதி, கொலை என்று எங்கெங்கோ சென்று கதைச் சொல்லி இருக்கிறார்கள். படம் எந்த சாதியை தூக்கிப் பிடிக்கிறது என்பதை வசனங்களில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக ரிச்சர்ட். ஆரம்ப காட்சிகளில் வெறிகொண்ட பார்வையும் வீராவேசமாகவும் வரும் அவர் பிளாஷ்பேக் காட்சிகளில் அமைதியான சிலம்பாட்ட வாத்தியாராகவும் அன்பு கணவராகவும் நடிப்பில் வெரைட்டி காட்டுகிறார். ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறதே வாத்தியாரே! திரெளபதியாக ஷீலா. அநியாயத்தை எதிர்த்து போராடும் கேரக்டர். விவசாய நிலத்தில் தண்ணீர் எடுப்பதற்கு எதிராக அவர் பேசும்போதும், நிர்வாணப் படம் எடுத்து மிரட்டுபவனை அம்மணமாக்கி வீடியோ எடுக்கச் சொல்லும்போதும் அத்தனை ஆவேசம். கடைசி நேரத்தில் வரும் கருணாஸுக்கு இதுவரை பார்க்காத வழக்கறிஞர் கேரக்டர். போலி வழக்கறிஞராக வரும் இளங்கோ, வில்லத்தனத்தை கண்களிலேயே காட்டிவிடுகிறார்.

செஞ்சி சேகராக வரும் கோபி, பதிவாளர் அலுவலகத்தில் பொருட்கள் விற்கும் அம்பானி சங்கர், ரிஷி ரிச்சர்ட்டின் மாப்பிள்ளை ஆறுபாலா, போலீஸ்காரராக வரும் நிஷாந்த், டாக்டர் லெனாகுமார், சப் ரிஜிஸ்ட்ரார் சேசு, செஞ்சி சேகர் கோபி என அனைவரும் சிறப்பானத் தேர்வு. ‘நிர்வாணங்கறது பொம்பளைகளுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும்தான்’ என்பது போன்ற சில வசனங்கள் கவனிக்க வைத்தாலும், சாதியை தூக்கிப் பிடிக்கும் அந்த சில வசனங்கள் தேவைதானா இயக்குனரே?

படத்தை சஸ்பென்ஸ் த்ரில்லராக கொண்டு செல்வதா அல்லது ஆக்‌ஷன் டிராமாவாக கொண்டு செல்வதா என்பதில் இயக்குனருக்கு ஏகப்பட்ட குழப்பம். அது நம்மையும் சோதிக்கிறது. இதுவரை சினிமா, நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் பணம் சுருட்டும் அதிகாரிகளைத்தான் காட்டியிருக்கிறது. இதில் வேலைக்காரர்களை ஓப்பியடிப்பதாகச் சொல்கிறார்கள். மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவு, கதையோட்டத்தில் வெரைட்டி காட்டுகிறது. ஜூபினின் பின்னணி இசை படத்துக்கு உதவி இருக்கிறது. ஒரு பாடல் ரசிக்கும்படி இருக்கிறது.

திருமணப் பதிவுகள் கேமரா முன்பு நடந்தப்பட வேண்டும் என்றும் அதை ஆவணப்படுத்த வேண்டும் என்பதை சொல்ல வந்திருக்கிறார்கள். ஆனால், கதை எங்கெங்கோ சென்றுவருவது ஒரு கட்டத்தில் போரடித்து விடுகிறது. மணப்பெண் இல்லாமல், மணமகன் இல்லாமல், அப்பா- அம்மா இல்லாமல், உருவாக்கப்படும் போலி திருமணச் சான்றிதழ் பதிவுகள் அதிர்ச்சி என்றாலும் அதைவிட அதிர்ச்சி, அதை வைத்து நடக்கும் பணம் பறிக்கும் மோசடி. தேவையற்ற கட்சிகளையும் வசனங்களையும் வெட்டி செதுக்கிவிட்டு அதை மட்டும் பட்டைத் தீட்டியிருந்தால் ரசித்திருக்கலாம்.


Advertisements

Next Post

தளபதி விஜயின் "மாஸ்டர்" படத்தின் இசை வெளியீடு எப்போது? எங்கே?

Sat Feb 29 , 2020
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் ஒரு சில பேட்ச் வொர்க் படப்பிடிப்பு மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் அதுவும் இந்த வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க விருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் மாஸ்டர் […]
%d bloggers like this: