பிளாஸ்டிக் சங்கத்திலிருந்து வெளியேறிய பெப்சி மற்றும் கோக்… காரணம் இதுதான்!

உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனங்களில் முக்கிய இடம் கோக கோலா மற்றும் பெப்சிக்கு உண்டு. இவற்றின் பானங்களின் விற்பனைக்காக பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அண்மையில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பிளாஸ்டிக் தொழில் சங்கத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன இந்த இரு நிறுவனங்களும். என்ன காரணம்?

“சங்கம் எங்கள் கடமைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் முழுமையாக ஒத்துப்போகவில்லை. அதனால் சங்கத்திலிருந்து விலகுகிறோம்” என இந்த முடிவுகுறித்து விலக்கம் அளித்துள்ளது கோக கோலா நிறுவனம். பெப்சி நிறுவனத்தின் தரப்பில், “நாங்கள் சங்கத்தின் பணிகளில் பங்கேற்கவில்லை, எங்கள் உறுப்பினர் இணைப்பு இந்த ஆண்டின் இறுதியில் முடித்துக் கொள்ளப்படும்” எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அடுத்த சில ஆண்டுகளில் கோக கோலா நிறுவனம் தனது தயாரிப்புகளில் குறைந்தது 50 சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தியிருக்கிறது. பெப்சி அக்ஃவாபினா தண்ணீரை மறுசுழற்சி செய்யும் கேன்களில் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதை சூழலியலாளர்கள் வரவேற்றுள்ளனர்.

“கோக கோலா மற்றும் பெப்சி ஆகிய நிறுவனங்கள் பிளாஸ்டிக் தொழில் சங்கத்தில் முன்னரே இடம்பெற்றது தவறுதான். பிளாஸ்டிக் தொழிலை ஆதரிக்கும், ஊக்குவிக்கும் ஒரு குழுவில் உறுப்பினராக இவ்வளவு காலம் தொடர்ந்தது, அந்த நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தரவில்லை. இப்போது இரண்டு நிறுவனங்களும் கொள்கைகளை மாற்றும் முடிவெடுத்து விலகியிருக்கிறார்கள்” என்கிறார், பிளாஸ்டிக் மாசு ஒழிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ டயானா கோஹென் (Dianna Cohen).

“பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதை பகிரங்கமாக சொல்ல முடியாது என்பதை நிறுவனங்கள் புரிந்துவைத்திருக்கின்றன. அதே நேரத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு நிதிரீதியாக ஆதரிக்கும் ஒரு சங்கத்தில் இனியும் இருக்க முடியாது. அதனால்தான் இரண்டு நிறுவனங்களும் வெளியேறி இருக்கின்றன.” என்கிறார், கிரீன்பீஸ் கடல்சார் விழிப்புணர்வு பிரசார இயக்குநர் ஜான் ஹொசேவர்.

பிளாஸ்டிக் பயன்பாட்டில் அதிகம் பங்கு வகிக்கும் இதுபோன்ற நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதற்காக எடுத்திருக்கும் இதுபோன்ற முன்னெடுப்புகள் அனைத்து நிறுவனங்களுக்கும் ஊக்கம் தரக்கூடியதுதான். ஆனால், இவை இதுபோன்ற செயல்களோடு நின்றுவிடாமல் நடைமுறைக்கும் வரவேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் விருப்பம்.

கோக கோலா 2017-ம் ஆண்டில் மட்டும் 3.3 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்திருப்பதாகவும், பெப்சிகோ எவ்வளவு பிளாஸ்டிக் உற்பத்தி செய்கிறது என்பதற்கான தரவுகள் எங்கேயும் இல்லை எனவும் எலன் மாக்ஆர்தர் அறக்கட்டளை சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

இப்போது இரு நிறுவனங்களும் புதிய பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கும், மறுசுழற்சி அதிகரிப்பதற்கும் வழிகளைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றன. மறுசுழற்சி செய்ய எளிதான அலுமினியம் போன்ற பொருட்களையும், பிளாஸ்டிக்குகளுக்கு மாற்று வழிகளையும் ஆராய்ந்து வருகின்றன. பெப்சி அதன் அக்ஃவாபினா தண்ணீர் அடுத்த ஆண்டில் இருந்து அமெரிக்க உணவகங்களில் அலுமினிய கேன்களில் விற்பனை செய்யப்படும் என்று சமீபத்தில் அறிவித்தது. அதேபோல சில்லறை கடைகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த இருக்கிறது.

“பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பதே எங்கள் நிறுவனத்தின் இலக்கு. இந்த சவாலை நான் தனிப்பட்ட முறையில் சந்திக்க தயாராக இருக்கிறேன். எங்கள் பிளாஸ்டிக் பேக்கேஜை குறைத்தல், மறுசுழற்சி செய்யப்பட்ட பாட்டில்களை பயன்படுத்துதல், பிளாஸ்டிக்கிற்கு மாற்று யோசித்தல் என பல வழிகளிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். 2025-ம் ஆண்டுக்குள் மக்கும் பொருளைக் கொண்டு மட்டும்தான் எங்கள் தயாரிப்புகள் சந்தைப்படுத்தப்படும்” என அறிவித்திருக்கிறார், பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி ரமோன் லாகுவார்டா (Ramon Laguarta). கோக கோலா நிறுவனம் கடந்த ஆண்டிலிருந்து கழிவில்லா உலகம் என்ற பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. 

ஆனால், “அமெரிக்க பிளாஸ்டிக் தொழில் சங்கத்திலிருந்து இந்த நிறுவனங்கள் வெளியேறியதற்கு கிரீன்பீஸ் அமைப்பே காரணம். அவர்கள் கொடுத்த தொடர் வற்புறுத்தலால்தான் இரண்டு நிறுவனங்களும் வெளியேறி இருக்கின்றன.” என்று குற்றம் சாட்டுகிறார், பிளாஸ்டிக் தொழில் சங்கத்தின் சி.இ.ஓ பட்டி லாங்.

“எது எப்படியோ இந்த இரண்டு நிறுவனங்கள் மாற்று வழி யோசித்தால் பெருமளவு பிளாஸ்டிக் கேன்களின் குப்பைகள் குறையும்” என்கிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

Credits: Vikatan

Advertisements

Next Post

மாதக்கணக்காய் ஆயுர்வேத சிகிச்சை.. ஆண்ட்ரியாவுக்கு அப்படி என்ன கடுமையான மன அழுத்தம்?

Sat Aug 10 , 2019
Advertisements
%d bloggers like this: