வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம்…பேருந்துகள் மீது கல்வீச்சு..

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு தரப்பினரின் கார் எரிக்கப்பட்டதற்கு பதிலடியாக அம்பேத்கர் சிலை உடைக்கப்படவே உருவான மோதலால் பதற்றம் நிலவியது.

வேதாரண்யம் கடைத் தெரு பகுதியில் வசிக்கும் இரு சமூக இளைஞர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு, பகை வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. முன்விரோதத்தைக் காரணம் காட்டி, நேற்று மாலை ஒரு தரப்பைச் சேர்ந்த இளைஞனை, மற்றொரு தரப்பினர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

அடிபட்ட இளைஞன் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது நண்பர்கள், தாக்கிய நபர்களைத் தேடியுள்ளனர். அப்போது தாக்குதல் நடத்திய தரப்பைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் நபர், தனது பொலிரோ காரை காவல் நிலையம் முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கண்ட எதிர் தரப்பினர், காரை ஆக்ரோஷத்துடன் அடித்து நொறுக்கியதுடன், தீவைத்தனர். சில நிமிடங்களில் அந்த கார் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்குள்ளாக வாகனம் முற்றிலும் எரிந்து போனது

கார் எரிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த உரிமையாளரும், அவர் தரப்பைச் சேர்ந்தவர்களும், கடைத் தெருவில் உள்ள அம்பேத்கர் சிலையை அடித்து நொறுக்கியதால் பதற்றம் தொற்றிக் கொண்டது. 
இரு தரப்பினரும் கட்டைகள், கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

பதற்றம் அதிகரித்ததை அடுத்து அங்கு பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, அப்பகுதி வெறிச்சோடியது. இதை அடுத்து திருச்சி சரக ஐஜி வரதராஜூலு, நாகை எஸ்.பி. ராஜசேகரன், திருவாரூர் எஸ்.பி. துரை ஆகியோரது தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

உடைக்கப்பட்ட சிலைக்கு மாற்றாக புதிய சிலை வைக்கப்படவே பதற்றம் ஓரளவு தணிந்தது. இரு தரப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கடைகள் ஓரளவு திறக்கப்பட்டதுடன் பேருந்துகளும் இயங்கத் தொடங்கியதால் நிலைமை ஓரளவுக்கு சீராகியுள்ளது.

இதனிடையே, அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும், பேருந்துகள் மீது கற்கள் வீசப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. கோவை காந்திபுரத்தில் இரு அரசுப் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பேருந்துகளின் பின் பக்க கண்ணாடிகள் முழுவதும் உடைந்தன.

தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டனம் என்று எழுதிய காகிதங்களை, ரப்பர் பேண்ட் உதவியுடன் கற்களில் சுற்றி, வீசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு பேருந்துகளிலும் பயணிகள் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலை முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரத்திற்கு அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசுப் பேருந்து ஒன்றின் இரு பக்க கண்ணாடிகளையும் மர்மநபர்கள் உடைத்தனர். பேருந்தை வழிமறித்த இருவர் கற்களாலும் கட்டைகளாலும் கண்ணாடிகளை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisements

Next Post

மோசடி வழக்கில் நடிகர் கவின் குடும்பத்தினருக்கு 5 ஆண்டுச் சிறை!

Thu Aug 29 , 2019
ஒரு பிரச்னை காரணமாக குடும்பத்தோடு திருச்சியிலிருந்து சென்னை குடிபெயர்ந்தோம். அப்போது உறவினர்கள் யாரும் அடைக்கலம் தரவில்லை. நண்பர்கள்தான் உதவினார்கள்’ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் கவின், நிகழ்ச்சியில் கூறிய வார்த்தைகள் இவை. இந்நிலையில் நடிகர் கவின் ராஜ் குடும்பத்தினர் சீட்டு மோசடி வழக்கில், `குற்றவாளிகள்’ எனத் திருச்சி மாவட்ட தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவின் ராஜ். இவரது தாய் ராஜலட்சுமி என்கிற […]

Actress HD Images

%d bloggers like this: