மாநகராட்சியின் ரூ 1000 கோடி நிலம் ஆக்கிரமிப்பு..!

சென்னை அடையாறு காந்திநகரில் பேட்ரிசியன் கல்லூரி ஆக்கிரமித்து வைத்திருந்த மாநகராட்சிக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது. நில ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக மாணவர்களை போராட தூண்டிய சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…
இந்தியா முழுவதும் 21 இடங்களில் பள்ளிக் கல்லூரிகளை நடத்திவரும் சிறுபான்மை சுயநிதி கல்வி குழுமமான புனித பேட்ரிக் கல்விக்குழுமத்தின் சார்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு அடையாறு காந்தி நகரில் தொடங்கப்பட்டது பேட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி..! இயக்குனர் செயலராக ஜான்சன் ரெக்ஸ் தனபாலையும், அகாடமிக் இயக்குனராக பாத்திமா வசந்தையும் கொண்டு இயங்குகின்ற இந்த கல்லூரி தான் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்த குற்றச்சாட்டுக்குள்ளாகி இருந்தது.


இந்த கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் ஐந்தரை ஏக்கர் நிலம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என்றும் அந்த நிலம் தற்போது விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி பலமுறை முறையிட்டும் கல்லூரி நிர்வாகம் நிலத்தை கொடுக்க மறுத்து நீதிமன்றம் வரை சென்றது.
இதுதொடர்பான வழக்கில், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை அந்தக் கல்லூரிக்கு சென்றனர்.
அதிகாரிகள் வருவதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட அந்தக் கல்லூரி நிர்வாகம், மாணவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தது, நிர்வாகத்தினரின் அறிவுறுத்தலின் பேரில் அங்கு குவிந்த மாணவர்கள் நிலத்தை மீட்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்
மாணவர்கள் போராட்டத்தை அடுத்து ஏராளமான போலீசார், அங்கு குவிக்கப்பட்டனர். இதையடுத்து மாணவர்கள் சாலையை விட்டு விலகி சாலையோரம் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.


இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பேட்ரிசியன் கல்லூரி நிர்வாகம், நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், வருகிற செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வர உள்ளதாகவும் அதற்குள்ளாக மாநகராட்சி நிலத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினர்.
கல்வி சேவை புரிவதாக கூறி அரசிடம் இருந்து சலுகைகளை பெற்றுக் கொள்ளும் இது போன்ற கல்வி நிறுவனங்கள், தங்களிடம் போதிய நிலம் இருப்பதாக கூறி கல்வி நிறுவனங்களை தொடங்குவதாகவும், பின்னர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று நீதிமன்றத்தை நாடுவதும், அது கைகொடுக்கவில்லையெனில் மாணவர்களை தூண்டி போராட்டம் நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டிய மாநகராட்சி அதிகாரிகள், மாலைக்குப் பின்னர் அதிரடியாக கல்லூரிக்குள் புகுந்து மாநகராட்சிக்கு சொந்தமான ஐந்தரை ஏக்கர் நிலத்தை மீட்டனர். அத்தோடு மீண்டும் யாரும் ஆக்கிரமித்து விடாதபடி தடுப்பு வேலியும் அமைத்து வருகின்றனர்.


சுமார் 19 ஆண்டுகளாக தனியாரின் பிடியில் இருந்த 1000 கோடி மதிப்புள்ள மாநகராட்சி நிலம் சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி மீட்டிருப்பது , மற்ற ஆக்கிரமிப்பாளர்களை அச்சம் கொள்ள செய்துள்ளது.

Advertisements

Next Post

இன்னைக்காவது விளையாட முடியுமா??.....இந்தியா-மேற்கிந்திய தீவுகள் 2வது ஒருநாள் போட்டி

Sun Aug 11 , 2019
இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 20 ஓவர் தொடரை இந்தியா 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டி ஆரம்பமானது. கயானாவில் நடந்த முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.2வது ஒரு […]
%d bloggers like this: