சிக்குவாரா சிதம்பரம்? உச்சநீதிமன்றத்தின் கையில் முடிவு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன் ஜாமின் மறுக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனமானது 2007ஆம் ஆண்டில் மொரிசியஸ் நாட்டின் மூன்று நிறுவனங்களிடம் இருந்து அந்நிய நேரடி முதலீடாக 305 கோடி ரூபாய் பெற்றதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்நிய முதலீட்டைப் பெற்றுக் கொடுக்க அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுத்ததாகவும் இதற்கு கைமாறாக கார்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் நிறுவனத்திற்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் சிபிஐ யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தன.

இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

இதை அடுத்து, தெற்கு டெல்லியில் ஜோர் பாஃக் பகுதியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு நேற்று மாலை 6 பேர் கொண்ட சிபிஐ குழு சென்றது. ப.சிதம்பரம் வீட்டில் இல்லாத காரணத்தால் அந்தக் குழு திரும்பி சென்று விடவே அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு சென்றனர்.

மீண்டும் நள்ளிரவில் அந்த வீட்டிற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், 2 மணி நேரத்தில் சிதம்பரம் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் ஒட்டினர். இன்று காலை 8 மற்றும் 10 மணிக்கும் சிதம்பரத்தைத் தேடி சிபிஐ அதிகாரிகள் சென்றதால் பதற்றம் நிலவியது.

இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், மூத்த வழக்கறிஞர்களுமான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

இதற்கிடையே சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது நீதிபதி என்.வி.ரமணா முன் பரிசீலனைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் சார்பில் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.

2 மணி நேரத்தில் சிதம்பரம் ஆஜராக வேண்டும் என சிபிஐ நோட்டீஸ் ஒட்டி இருக்கும் தகவல் நீதிபதி முன் தெரிவிக்கப்பட்டு, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டது. அதேவேளையில் சிதம்பரத்திற்கு முன் ஜாமின் கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றுவதாகவும், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மனுவை அவசரமாக விசாரிப்பதா? வேண்டாமா என அவர் முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார். தற்போது தலைமை நீதிபதி அறைக்கு வழக்கறிஞர்கள் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ப.சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.

ப.சிதம்பரம் வழக்கில் தங்களது கருத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. எனவே வழக்கு விசாரணைக்குப் பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில், சிபிஐயின் கருத்துகளைப் பொருத்தே உத்தரவு அமையும். 

ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவில், முன் ஜாமின்  நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் தொடர்பாக வினவப்பட்டுள்ளது. மனுதாரர் தப்பி விடப் போவதாக குற்றச்சாட்டு ஏதும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மனுதாரர், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தவோ அல்லது அதை மாற்றி அமைக்கவோ போவதாகவும் குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைமை நீதிபதி அமர்வை, கபில் சிபல் நாடிய போது, அயோத்தி வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ப.சிதம்பரம் வழக்கு தொடர்பாக, நீதிமன்றப் பதிவாளர், தலைமை நீதிபதியிடம் முறையிட்டார். ஆனால், மனுவில் பிழை இருப்பதாக திருப்பி அனுப்பப்பட்டது. மனுவில் இருந்த பிழை சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் நீதிபதி என்.வி.ரமணா முன் கபில் சிபல் மனுத்தாக்கல் செய்தார்.

இருந்தபோதிலும், வழக்கை எடுத்துக் கொள்ள மறுத்து விட்ட அவர் தலைமை நீதிபதி தான் விசாரிப்பார் என்று கூறி விட்டார். இதை அடுத்து மீண்டும் தலைமை நீதிபதி அமர்வை, ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் குழு நாடியுள்ளது. மனு தொடர்பாக 4 மணிக்கு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட உள்ளது. வழக்கு இன்னும் பட்டியலிடப்படவில்லை என்பதால் இன்று விசாரணைக்கு வருவது சாத்தியமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisements

Next Post

BREAKING : Vivek to Act in Indian 2 ? & Nayanthara Important Update | Kamal Haasan

Wed Aug 21 , 2019
Advertisements
%d bloggers like this: