ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளிலும், ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், அதிலும் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணியாற்ற,  ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை, தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்த வகையில், ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும், இடைநிலை ஆசிரியர் பணிக்கான, ஆசிரியர் தகுதித் தேர்வு, முதல் தாள் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி நடைபெற்றது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. முதல் தாள் தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 313 பேர் எழுதியிருந்தனர்.  தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானபோது ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறாமல், வெறும் 482 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதிலும், 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 82-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பொதுப்பிரிவுக்கு (OC) குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் 90-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில், 324 பேர் மட்டுமே 82 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

24 பேர் மட்டுமே, 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்ச மதிப்பெண் 96 ஆக உள்ளது. OMR Sheet-ல் சரியான விடையை Shade செய்து குறிப்பிடுவதில் பெரும்பாலான தேர்வர்கள் தவறு செய்துள்ளதால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் சிரமம் இருந்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. முதல்தாள் போலவே இரண்டாம் தாளிலும் கேள்விகள் மிக மிக கடுமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வினாத் தாள் கடினமாக தயாரிக்கப்பட்டதற்கான காரணங்களை டி.ஆர்.பி. அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 
தமிழக அரசின் பாடத் திட்டம் இந்த ஆண்டு 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ற வகையில் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வினாத் தாள் கடினமாக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளையில் தேர்வில் தோல்வி அடைந்ததற்கு வினாத்தாள் கடினமாக இருந்ததை சுட்டிக் காட்டியுள்ள தேர்வர்கள், ஏற்கெனவே காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் ஆர்வம் இல்லாமல் போனதும், இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisements

Next Post

ஸ்பைடர்மேன் படங்கள் தயாரிப்பை கைவிட்டது மார்வெல் நிறுவனம்

Thu Aug 22 , 2019
உலகப் புகழ் பெற்ற காமிக்ஸ் ஹீரோ ஸ்பைடர்மேன் இல்லாமல் அடுத்த படத்தை தயாரிக்க மார்வெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஸ்பைடர் மேன் படங்களை 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் மார்வெல்நிறுவனம் தயாரித்துள்ளது. இவ்விரு படங்களும் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளன. இதில் டாம் ஹாலண்ட் ஸ்பைடர் மேனாக நடித்திருந்தார். இனிமேல் ஸ்பைடர் மேன் படங்களைத் தயாரிப்பதில்லை என்று மார்வெல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஸ்பைடர் மேன் படங்களின் தயாரிப்பு நிறுவனங்களான டிஸ்னி நிறுவனத்திற்கும் […]

Actress HD Images

%d bloggers like this: