வண்ண, வண்ண சிலைகள் – விநாயகர் சதுர்த்திக்கு ஏற்பாடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ள நிலையில், சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

செப்டம்பர் 2ஆம் தேதி அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது இந்து அமைப்புகளும், கோயில் நிர்வாகிகளும் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவது வழக்கம். குறிப்பாக சென்னையில் நிறுவப்படும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் கடலில் கரைக்கப்படும்.

விநாயகர் சிலைகளை வடிவமைப்பதற்கும், நிறுவுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. 10 அடிக்கு மேல் சிலைகள் இருக்கக் கூடாது, ரசாயன பூச்சு, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை நிறுவ வேண்டும், சர்ச்சைக்குரிய இடங்களில் வைக்கக் கூடாது என்றும் காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். புதிதாக யாருக்கும் சிலைகள் வைக்க அனுமதி இல்லை என்றும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 2,500 சிலைகள் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய அமைப்புகளின் சிலைகளை, ஊர்வலமாக கொண்டு சென்று அடுத்த மாதம் 8ம் தேதி கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுவும் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டும் தான் சிலை ஊர்வலம் நடத்தப்பட வேண்டும் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளையில் சென்னையில் விநாயகர் சிலைகளை நிறுவ மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளில் தனித்தனியாக விண்ணப்பிக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தி ஒற்றை சாளர முறையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கென அமர்த்தப்பட்டுள்ள ஆய்வாளர்களிடம் விண்ணப்பிக்கும் வகையில் சுலபமாக்கப்பட்டுள்ளது.

நாளையுடன் கடைசி நாள் என்பதால் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை கொசப்பேட்டை பகுதியில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வீட்டில் வைத்து வழிபடுவதற்கான சிலைகள், இயற்கை முறையிலான வண்ணப் பூச்சுகள் கொண்ட சிலைகள் என அதிக பட்சமாக 10 அடி உயரமுள்ள சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே ரசாயனம், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்குமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பல்வேறு அமைப்பினரும் மனு அளித்து வருகின்றனர்.

Advertisements

Next Post

நடிகை மதுமிதாவுக்கும், தனியார் தொலைக்காட்சிக்கும் இடையே மோதல்?

Wed Aug 21 , 2019
தன் மீது தனியார் தொலைக்காட்சி அளித்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக நடிகை மதுமிதா கூறியுள்ளார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, காவிரி பிரச்சனை தொடர்பான வாக்குவாதத்தில் தன்னை காயப்படுத்திக் கொண்டதாகக் கூறி 50 நாட்களிலேயே வெளியேற்றப்பட்டார். ஒப்பந்தப்படி மதுமிதாவுக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், மீத பணத்தை சில நாட்களில் கொடுப்பதென பேசி முடிவெடுத்து இருந்ததாகவும் தொலைக்காட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த […]
%d bloggers like this: